
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-25,பினாங்கு, பாயா தெருபோங், தாமான் ஸ்ரீ ரம்பாயில் இன்று காலை நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி வீட்டின் பின்புறம் இடிந்ததில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காலை 8.36 மணியளவில் அவசர அழைப்புப் பெறப்பட்டதை அடுத்து, பாயா தெருபோங் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடம் விரைந்தனர்.
சம்பவத்தின் போது வீட்டில் இருந்த மூன்று பேரில் இருவர் அதிர்ஷ்டவசமாகத் தப்பியோடி தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.
இருப்பினும், நிலச்சரிவில் சிக்கித் தவித்த மற்றொரு நபர் மீட்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை மருத்துவக் குழுவினர் பின்னர் உறுதிப்படுத்தினர்.
சம்பவ இடத்தில், தீயணைப்புப் படையினர், அவசரகால மருத்துவ உதவிப் பிரிவினர் (EMRS) மற்றும் போலீஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



