Latestமலேசியா

ஓட்டுநர்களுக்கு RM1,000 உதவித்தொகை மலாக்கா தேர்தலுக்கான வாக்கு வேட்டை அல்ல; அந்தோணி லோக் விளக்கம்

மலாக்கா, அக்டோபர்-27,மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களைக் கவரும் நோக்கிலேயே டேக்ஸி, வாடகைக் கார் மற்றும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவதாகக் கூறப்படுவதைப், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மறுத்துள்ளார்.

2027 வரவு செலவுத் திட்டத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த இந்த உதவித்தொகை, மலாக்காவுக்கு மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள தகுதியான ஓட்டுநர்களுக்கும் வழங்கப்படுவதாக அவர் தெளிவுப்படுத்தினார்.

நேற்று மலாக்கா, ஆயர் குரோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 283 டேக்ஸி மற்றும் வாடகைக் கார் ஓட்டுநர்களுக்குத் தலா 1,000 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான உதவிக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

கடந்த வாரம் நெகிரி செம்பிலானில் உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில், அடுத்த வாரம் கெடாவிலும் வழங்கப்படும் என்றார் அவர்.

மொத்தமாக, இவ்வாரம் மட்டும் சுமார் 12 ஆயிரம் ஓட்டுநர்கள் இந்த உதவியைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செல்லுபடியாகும் ஓட்டுநர் அட்டை வைத்திருப்பதுடன், தரைப் பொது போக்குவரத்து நிறுவனமான APAD-டின் சரிபார்ப்பைப் பெற்ற தகுதியானவர்களுக்கு, உதவித்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அந்தோணி லோக் கூறினார்.

மலாக்கா சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!