
கோலாலம்பூர், அக்-30-பொதுமக்களின் அன்றாடப் பயணங்களுக்கு இடையூறாக இருக்கும் ரயில் சேவைகளின் நெரிசல் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கிற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
ரயில் நிலையங்களில் நிலவும் கடும் நெரிசல் குறித்து ‘siti.anisahj’ என்ற சமூக ஊடகப் பயனர் ‘Threads’ தளத்தில் அதிருப்தி வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து பிரதமர் அந்த உத்தரவைப் பிறப்பித்தார். அப்பிரச்சனை அடிக்கடி நிகழ்வதாகவும் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளைப் பாதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், அவ்விவகாரம் குறித்து ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு Rapid KL நிறுவனத்தையும் பிரதமர் கேட்டுக் கொண்டார். அவ்விஷயத்தில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இவ்வேளையில் பிரதமரின் பதில் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. அது 25,000-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும், சுமார் 300 கருத்துகளையும், ஏறக்குறைய 1,500 பகிர்வுகளையும் பெற்றது. காரில் சென்றால் போக்குவரத்து நெரிசலும், ரயிலில் சென்றால் பயணிகள் கூட்டமும் அதிகமாக இருப்பதாக ‘siti.anisahj’ எனும் அப்பயனர் முன்னதாக தமது அதிருப்தியை வெளியிட்டு சில புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
கடந்த அக்டோபர் 12ஆம் தேதி விமான நிலைய ரயில் பாதையில் நிகழ்ந்த இரண்டு தனித்தனி கேபிள் திருட்டுச் சம்பவங்களால் KLIA Ekspres மற்றும் KLIA Transit சேவைகள் பாதிக்கப்பட்டன. புத்ராஜெயா-சைபர்ஜெயா மற்றும் Salak Tinggi நிலையங்களுக்கு இடையே சுமார் 180 மீட்டர் நீளமுள்ள சிக்னல் கேபிள்கள் திருடப்பட்டதால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அக்டோபர் 8ஆம் தேதி Bukit Bintang பிந்தாங் நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால் MRT காஜாங் வழித்தடத்தில் சுமார் மூன்று மணி நேரம் கடும் நெரிசல் நிலவியது. இதனால் மற்ற நிலையங்களிலும் பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும், குறிப்பாக Bangsar LRT நிலையத்தில் பலர் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன.



