Latestமலேசியா

MotoGP புகார்களைத் தொடர்ந்து செப்பாங் பந்தயப் பாதையைச் சீரமைக்கப் பரிசீலனை

கோலாலம்பூர், நவம்பர் 2 – மோட்டோஜிபி (MotoGP) வீரர்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, செப்பாங் சர்வதேச மோட்டார் பந்தயத் திடலில் (SIC) சாலை மேற்பரப்பைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்காகப் பந்தயத் திடல் தற்காலிகமாக மூடப்படுமென அதன் தலைமைச் செயல் அதிகாரி அஸ்ஹான் ஷஃப்ரிமான் ஹனிப் (Azhan Shafriman Hanif) தெரிவித்தார்.

சீரமைப்புப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படுமா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் செய்யப்படுமா என்பது, மோட்டோஜிபி மற்றும் சர்வதேச மோட்டார் சைக்கிள் கூட்டமைப்பின் (FIM) ஆய்வறிக்கை கிடைத்த பின்னரே முடிவு செய்யப்படும் என்றார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மோட்டோஜிபி ஆரம்பகட்ட சோதனைக்கும், ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1 வரை நடைபெறும் அதிகாரப்பூர்வ முன்பருவச் சோதனைக்கும் முன்னதாக இப்பணிகள் முடிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்குப் போர் காரணமாகப் தார் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலையும் போக்குவரத்துச் செலவும் அதிகரித்ததால், இவ்வாண்டு திட்டமிடப்பட்ட முழுமையான சீரமைப்புக்குப் பதிலாக, சாலையின் மேற்பரப்பை அரைத்து சமப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செப்பாங் பந்தயத் திடலில் கடைசியாக 2016ஆம் ஆண்டு முழுமையான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!