
புத்ராஜெயா, நவம்பர்-6,நாட்டின் இணைய அச்சுறுத்தல் நிலை ‘நடுத்தர’ (Medium) நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC தனது கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அவ்வகையில், MKN எனப்படும் தேசியப் பாதுகாப்பு மன்றம் மற்றும் NACSA உள்ளிட்ட முக்கிய அதிகார அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் MCMC, தொலைத்தொடர்பு, ஒலிபரப்பு மற்றும் கொரியர் சேவைகள் உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவனங்களை எந்தவோர் அவசர நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இதனிடையேல், ஐரோப்பாவில் இரத்த பிளாஸ்மா மற்றும் உணவுப் பொருட்களின் குளிரூட்டும் அமைப்புகளை hackers எனப்படும் இணைய ஊடுருவிகள் முடக்கியது போன்ற அசாதாரண இணையத் தாக்குதல்கள் குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களின் (suppliers) தொலைதூர அணுகல் (Remote access) மற்றும் மருத்துவமனை இரத்த வங்கிகளின் பாதுகாப்பு முறைகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.
தவிர, பொது மக்களும் தங்களது இணையக் கணக்குகளுக்கு பல அடுக்கு கடவுச்சொற்களை (MFA) பயன்படுத்துமாறும், இணைய மோசடிகள் மற்றும் வதந்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



