Latestமலேசியா

பெரானாங்கில் புகைப்படத் தொழிலில் ஈடுபட்ட தம்பதி, வீட்டின் வெவ்வேறு அறைகளில் சடலமாக மீட்பு

காஜாங், நவம்பர்-14 – சிலாங்கூர், பெரானாங்கில் உள்ள ஒரு வீட்டின் மாடிப் பகுதியில், யோகன் மற்றும் ராஜேஷ்வரி எனும் கணவன், மனைவி இருவரும் வெவ்வேறு அறைகளில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

பண்டார் தாசிக் கெசுமாவில் உள்ள இரட்டை மாடி வீட்டில், நேற்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாலை 6.31 மணியளவில் இச்சம்பவம் தொடர்பான புகார் கிடைத்ததாக காஜாங் மாவட்டப் போலீஸ் தலைவர் ACP நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

உயிரிழந்த இருவரும் புகைப்படச் சேவை வழங்கும் தொழிலை நடத்தி வந்ததாக நம்பப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக அவர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, உறுதியளித்த புகைப்படச் சேவைகளை வழங்கவில்லை எனச் சில இணையப் பயனர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இதனால், இணையவழி துன்புறுத்தல் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ள போதிலும், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் தம்பதியரின் மரணத்திற்கும் தொடர்பு இருப்பதாகப் போலீஸ் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இதனிடையே, உயிரிழந்த 34 வயது பெண் கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், இந்தத் தகவலும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனையில், குற்றச்செயல் நிகழ்ந்ததற்கான தெளிவான தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இருவரின் உடல்களும் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய சவப் பரிசோதனைக்காக காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!