
மலாக்கா, நவ.14 –மலாக்காவின் 16ஆவது மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. மாநிலத்தின் 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க, 675,166 வாக்காளர்கள் இன்று வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதற்காக மாநிலம் முழுவதும் 240 வாக்குப்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இம்முறை 70 விழுக்காடு வாக்குப்பதிவைத் தேர்தல் ஆணையம் இலக்காகக் கொண்டுள்ளது.
மொத்தம் 79 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள இத்தேர்தலில், பாரிசான் நேஷனல் 23 தொகுதிகளிலும், பக்காத்தான் ஹராப்பான் 24 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்திய வேட்பாளர்களைப் பொறுத்தவரை, பாரிசான் நேஷனல்–மஇகா சார்பில் எஸ். நடராஜா காடேக் தொகுதியில் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் கே. ஜெகசீலனும், பெர்சாமா கட்சி சார்பில் பி. லவீனும் களமிறங்கியுள்ளனர்.
அசாஹான் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பானின் பி. தினேஷும், மச்சாப் ஜெயாவில் பெர்சாமா கட்சியின் பிரசாந்த் குமார் பிரகாசமும் போட்டியிடுகின்றனர்.
இம்மாநிலத் தேர்தலில் l ராணுவத்தினர், அவர்களது துணையினர் மற்றும் போலீசாருக்கான வாக்குப்பதிவு முன்கூட்டிய நடைபெற்று விட்டது.



