Latestமலேசியா

RSN ராயரிடம் மன்னிப்பு கேட்கத் தவறியவருக்கு ஒரு மாதச் சிறை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு

 

 

ஜோர்ஜ்டவுன், நவம்பர்-14 – ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவும், அவதூறான கருத்துகளை மீட்டுக்கொள்ளவும் தவறிய ஆடவர் ஒருவருக்கு ஒரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

50 வயதான S. முருகேசன் என்பவருக்கு, நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக பினாங்கு ஜோர்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றம் அத்தண்டனையை விதித்தது.

 

மேலும், மூவாயிரம் ரிங்கிட் வழக்குச் செலவுத் தொகையைச் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

கடந்த மே 22-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, இரண்டு நாளிதழ்களிலும், வாட்சப், டிக்டோக் மற்றும் ஃபேஸ்புக் தளங்களிலும் முருகேசன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது.

 

ஆனால், அந்த உத்தரவை அவர் நிறைவேற்றவில்லை என ராயரின் வழக்கறிஞர் குமாரதிரவியம் தெரிவித்தார்.

 

அதோடு, தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றைய தினமும், இரண்டு நாட்களுக்குப் பின்னரும் ராயர் தொடர்பாக முருகேசன் மீண்டும் அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக அவர் கூறினார்.

 

முன்னதாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிதி தொடர்பாக ராயருக்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறு வீடியோகளுக்காக, 100,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க முருகேசனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

இதனிடையே, முருகேசனுக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பிக்கக் கோரி விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அவ்வாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!