
கோலாலம்பூர், நவம்பர்-14 – கோலாலம்பூர், KLCC பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்தின் முன்புறமுள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்கிடமான பயணப்பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, 40 வயது உள்நாட்டு ஆடவர் ஒருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
நேற்றிரவு 7.17 மணியளவில் அப்பயணப்பெட்டி குறித்து தகவல் கிடைத்ததாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மட் அஸ்வான் அமின் நோர்டின் தெரிவித்தார்.
இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு, K9 மோப்ப நாய்கள் பிரிவு மற்றும் தடயவியல் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து சோதனை மேற்கொண்டனர்.
எனினும் சோதனையில், அந்தப் பயணப்பெட்டியில் வெடிகுண்டு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
என்றபோதிலும், இச்சம்பவம் தொடர்பான மேல் விசாரணைக்காக 40 வயது ஆடவர் கைதானார்.
இந்நிலையில், விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பவோ, தேவையற்ற யூகங்களை வெளியிடவோ வேண்டாமென பொது மக்களைப் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, KLCC-யின் முதன்மை நுழைவாயில் அருகே போலீஸாரின் வருகையையும், கடும் நெரிசல் நிலவுவதையும் குறிப்பிட்டு Threads சமூக ஊடகத்தில் ஏராளமான பதிவுகள் வைரலாகின.



