Latestமலேசியா

தொலைபேசி மோசடியில் பெண் ஆசிரியர் RM748,326 இழப்பு

ஜோகூர், நவம்பர் 17 – மருத்துவமனை ஊழியர் மற்றும் போலீஸ் அதிகாரி எனப் போலியாக அடையாளப்படுத்திக் கொண்ட மோசடி கும்பலிடம் சிக்கிய 54 வயது பெண் ஆசிரியர் ஒருவர் 748,326.50 ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், சிலாங்கூர், ராவாங்கிலுள்ள தனியார் மருத்துவமனை ஊழியர் எனக் கூறிய நபர் ஒருவர், ஆசிரியையின் பெயரைப் பயன்படுத்தி வேறு ஒருவர் காப்பீட்டுத் தொகை கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பின்னர், புக்கிட் அமானைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்ட மற்றொரு நபருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இணையம் வழியாகப் போலீஸ் புகார் அளிக்க உதவுவதாகக் கூறி, ஆசிரியையின் ஏடிஎம் அட்டையை பேங்க் நெகாராவிடம் (Bank Negara) ஒப்படைக்க வேண்டுமென மோசடி கும்பல் கேட்டுள்ளது. இதனை நம்பிய அவர், செப்டம்பர் 3ஆம் தேதி தனது ஏடிஎம் அட்டையை வீட்டிற்கு அருகிலுள்ள கடையில் வைத்ததுடன், மறுநாள் மூன்று வங்கிக் கணக்குகளில் 75,000 ரிங்கிட் பணத்தையும் செலுத்தியுள்ளார்.

கடந்த வாரம் வங்கிக் கணக்கைச் சரிபார்த்தபோது, அடையாளம் தெரியாத நபர்களுக்கு 673,326.50 ரிங்கிட் பணம் மாற்றப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளார். இதையடுத்து, நவம்பர் 15ஆம் தேதி தனது சகோதரியிடம் தெரிவித்த பின்னரே தான் மோசடிக்கு உள்ளானதை உணர்ந்துள்ளார்.

இச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் ஷாருலானுவார் முஷாடாட் அப்துல்லா சானி (Shahrulanuar Mushaddat Abdullah Sani) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!