Latestமலேசியா

உயர்வு மடானி தொழில்முனைவோர் மானியத்திற்கு 8,300 விண்ணப்பங்கள்; சீராய்வுப் பணியில் மித்ரா!

புத்ராஜெயா, நவ. 18– இந்திய சமூகத் தொழில்முனைவோரின் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் மித்ரா உயர்வு மடானி மானியத் திட்டத்திற்கு இதுவரை சுமார் 8,300 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

மலேசிய இந்திய சமுதாய உருமாற்றப் பிரிவு (மித்ரா) தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர் கூறுகையில், அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதால், தகுதியான விண்ணப்பதாரர்களை அடையாளம் காணும் சீராய்வுப் பணிகளுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார்.

விண்ணப்பங்களை முறையாக மதிப்பீடு செய்து, முதற்கட்ட மானிய விநியோகத்தை விரைவில் செயல்படுத்த மித்ரா நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

“இதுவரை உயர்வு மடானி திட்டத்திற்கு சுமார் 8,300 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், தற்போது சீராய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது.

“முதற்கட்ட மானியங்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களை நேரடியாகத் தொடர்புகொள்வோம். ஏனைய விண்ணப்பதாரர்களுக்கும் படிப்படியாகத் தகவல் தெரிவிக்கப்படும்,” என்றார்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற மனிதவள அமைச்சின் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

உயர்வு மடானி திட்டம், இந்திய சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரின் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், வருமானத்தை அதிகரிக்கவும், பொருளாதார நிலையை மேம்படுத்தவும் உதவும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.

இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி, கல்வி, மனிதவள மேம்பாடு, சமூக நலன் ஆகியவற்றை வலுப்படுத்த மித்ரா பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

அதன் மூலம், அரசாங்கத்தின் உதவிகள் உரிய இலக்குக் குழுவினரைச் சென்றடைவதையும், திட்டங்கள் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப பயனளிப்பதையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!