
சுங்கை சிப்புட், நவம்பர்-21,பேராக், சுங்கை சிப்புட்டில் பூர்வக்குடி ஆடவர் ஒருவரைக் கொன்றதாக நம்பப்படும் புலி, வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் இலாகாவான PERHILITAN அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது.
வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
புலியால் ஏற்பட்ட அச்சுறுத்தலிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவே அதனைச் சுட நேர்ந்ததாக PERHILITAN விளக்கமளித்துள்ளது.
சுமார் 10 மீட்டர் தூரத்திலிருந்து சுடப்பட்ட தோட்டாக்கள், புலியின் வலது தோள்பட்டையிலும் கழுத்தின் பின்புறத்திலும் பாய்ந்தன.
வலியோடு தப்பியோடிய புலி, பின்னர் 20 மீட்டர் தொலைவில் இறந்து கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் கீழ் இடப்புறக் கோரைப்பல் காணாமல் போயிருந்ததுடன், மற்ற கோரைப்பற்களும் மழுங்கியிருந்தன.
வயிற்றுப் பகுதியிலும் பழைய காயம் இருந்தது கண்டறியப்பட்டது.
முன்னதாக, நவம்பர் 18-ஆம் தேதி காட்டில் மூங்கில் தேடச் சென்ற 65 வயது Ngah Itam, புலி தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்நிலையில், செப்டம்பர் 21-ஆம் தேதி மற்றொரு பூர்வக்குடி ஆடவரைத் தாக்கியதும் இதே புலியாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
புலியின் சடலம் சவப் பரிசோதனைக்காகச் சுங்காயிலுள்ள தேசிய வனவிலங்கு மீட்பு மையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.



