
அலோர் ஸ்டார், நவம்பர்-29,கெடா, அலோர் ஸ்டாரில் மின்சார SUV வாகனத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தொழில்நுட்பக் கோளாற்றால், 6 வாகனங்கள் சம்பந்தப்பட்ட தொடர் விபத்து நிகழ்ந்துள்ளது.
சுல்தான் அப்துல் ஹலிம் நெடுஞ்சாலையில், சிம்பாங் குவாலா போக்குவரத்து விளக்குச் சந்திப்பில் அவ்விபத்து நிகழ்ந்தது.
37 வயது ஆடவர் ஓட்டிச் சென்ற BYD Sealion 7 இரக மின்சார வாகனம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திடீரென நகராமல் நின்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்த ஓட்டுநர் பலமுறை ஆக்சிலரேட்டரை அழுத்தியபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, இடதுபுறத் தடத்தில் நின்றிருந்த வாகனத்தின் பின்பகுதியில் மோதியது.
இதனால் மற்ற வாகனங்களும் தொடர் விபத்தில் சிக்கியதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் Syed Basri Syed Ali தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மின்சார வாகனத்தின் ஓட்டுநர், வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்ட பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பதும் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, இதர வாகனங்களின் ஓட்டுநர்கள் எவரும் காயமடையவில்லை.
எனினும், சம்பந்தப்பட்ட SUV ஓட்டுநர் மதுபோதையில் இருந்திருக்கலாம் எனக் கூறி, பாதிக்கப்பட்ட இதர வாகனமோட்டிகள் அவரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ முன்னதாக வைரலானது.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.



