
கோலாலம்பூர், ஜூலை-18 – “தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவல்களை மேம்படுத்த வேண்டும், ஆனால் அது ஊடகவியலின் அடிப்படையான மனிதப் பண்புகள், விவேகம் மற்றும் சரிபார்ப்புத் தன்மையைச் சிதைக்க அனுமதிக்கக்கூடாது” என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
AI காலத்தின் சவால்கள் மற்றும் எல்லையற்ற தகவல் பெருக்கத்திற்கு மத்தியில், உண்மைத்தன்மை மற்றும் நேர்மையுடன் செயல்படும் ஊடகவியலாளர்களின் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

நேற்றிரவு கோலாலம்பூரில் உள்ள The Majestic ஹோட்டலில் நடைபெற்ற ‘மலேசிய ஊடகவியலாளர் இரவு 2026’ (Malam Wartawan Malaysia 2026) நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது அன்வார் அவ்வாறு சொன்னார்.
MPI எனப்படும் மலேசியப் பத்திரிகையாளர்கள் கழகத்தின் ஏற்பாட்டில் பெட்ரோனாஸ் நிறுவனத்தின் முதன்மை ஆதரவில் நடைபெற்ற இந்த வருடாந்திர விழாவில், உள்ளூர் ஊடகத்துறையின் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதில் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில், MPI தலைவர் டத்தோ Yong Soo Heong, MPI இயக்குநர் வாரிய உறுப்பினரும் வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குநருமான தியாகராஜன் முத்துசாமி உள்ளிட்ட செய்தி ஊடகப் பிரமுகர்கள் என சுமார் 1,000 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

பத்திரிகை, ஒளிபரப்பு, வானொலி, பல்லூடகம், புகைப்பம், ஆவணப் படம் உள்ளிட்ட 21 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்வாண்டின் மிக உயரிய விருதான ‘கஜாய் விருது’ (Anugerah Kajai), ‘Nasib Budak Flat என்ற சிறப்புச் செய்தித் தொடரை வழங்கிய Sinar Harian பத்திரிகையாளர் Nurul Hidayah Hamid-டுக்கு வழங்கப்பட்டது.
30,000 ரிங்கிட், வெற்றிக் கிண்ணம் சான்றிதழ் ஆகியவற்றை அவர் பெற்றார்.
இவ்வேளையில், சிறந்த புலனாய்வுச் செய்திக்கான தங்க விருதை வென்ற மலேசியா கினி செய்தியாளர் பி. நந்தகுமார், 10,000 ரிங்கிட் பரிசுத் தொகை, கிண்ணம் மற்றும் சான்றிதழைப் பெற்றார்.
தியாகராஜனும் வெற்றியார்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

மலேசிய ஊடகத்துறை, ஜனநாயகத்தின் குரலாகவும், உண்மைகளின் பாதுகாவலனாகவும் தொடர்ந்து செயல்படுவதை இந்த நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது.



