
கங்கார், ஜூன்-17 – புக்கிட் லாகியில் உள்ள Cenderawasih குகையினுள் cafe காப்பிக் கடை திட்டத்திற்கான செயல்பாடுகளை நிரந்தரமாக நிறுத்த பெர்லிஸ் மாநில அரசு முடிவுச் செய்துள்ளது.
அந்த சுற்றுலா தலத்தைப் பாதுகாக்க வேண்டியக் கடப்பாடு மற்றும் அங்கு வரும் மக்களின் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு அம்முடிவெடுக்கப்பட்டது.
சுற்றுலா, கலை, கலாச்சாரம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான பெர்லிஸ் ஆட்சிக் குழு உறுப்பினர் அபு பாக்கார் ஹம்சா அதனைத் தெரிவித்தார்.
எனவே, குகைக்குள் நிர்மாணிக்கப்பட்ட கட்டமைப்புகள், பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கும் அதன் புவியியல் பாரம்பரிய மதிப்பைப் பாதுகாப்பதற்கும் ஏதுவாக, விரைவில் முற்றிலுமாக அகற்றப்படும்.
cafe நடத்துநர் குகைக்கு வெளியே அதன் மேம்பாட்டை மேற்கொள்ள ஊராட்சி மன்றத்திடம் மீண்டும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்; ஆனால் குகைப் பகுதிக்குள் எந்த நிரந்தர கட்டமைப்புகளையும் நிர்மாணிக்க அனுமதிக்கப்படாது என்றார் அவர்.
நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் பழமையான புவியியல் பாரம்பரியத்தை பாதிக்கும் எனக் கூறி, இந்த cafe திட்டத்தை பல அரசு சாரா அமைப்புகள் எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதி பண்டைய கடல் பள்ளங்கள், சிறு குகைகள், காளான் வடிவ பாறை கட்டமைப்புகள் மற்றும் மண்டை ஓடுகள் போன்ற தனித்துவமான புவியியல் அம்சங்களையும் கொண்டுள்ளது.