Latestமலேசியா

DAP தலைவர்களை அவமதித்ததற்காக சித்தி மஸ்துரா RM750,000 இழப்பீடு வழங்க வேண்டும்; தீர்ப்பை நிலைநிறுத்திய மேல் முறையீட்டு நீதிமன்றம்

புத்ரா ஜெயா, ஏப்ரல் 24 – DAP யின் மூன்று மூத்த தலைவர்களை அவமதித்ததற்காக, PAS நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா முகமட்( Siti Mastura Muhammad) 750,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.

நீதிபதி அகமட் கமால் ( Ahmad Kamal Shahid) தலைமையில்
நீதிபதிகள் எவ்ரோல் மரியெட் பீட்டர்ஸ் (Evrol Mariette Peters) மற்றும் லத்திபா தஹார் (Latifah Tahar) ஆகியோருடன் அமர்ந்திருந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, Siti Masturaவின் மேல் முறையீட்டை ஏகமனதாக தள்ளுபடி செய்தது.

சித்தி மஸ்துராவின் மேல்முறையீட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றம் கண்டறிந்ததாகவும், கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி பினாங்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஉறுதிப்படுத்துவதாக நீதிபதி அகமட் கமால் தீர்ப்பளித்தார்.

2023ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி தெரெங்கானுவின் கெமாமானில் ஆற்றிய அரசியல் உரையின் போது, மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் சின் பெங்குடன் (Chin Peng) குடும்ப உறவுகள் இருப்பதாகக் கூறி, லிம் கிட் சியாங் (Lim Kit Siang) , லிம் குவான் எங் மற்றும் தெரசா கோக் ஆகியோரைத் தொடர்புபடுத்தி Siti Mastura அவதூறு ஏற்படுத்தியிருந்தார் என நீதிமன்றம் கண்டறிந்தது.

டி.ஏ.பியின் அந்த மூன்று தலைவர்களுக்கும் பினாங்கு உயர் நீதிமன்றம் ஆதரவாகத் தீர்ப்பளித்து, கிட் சியாங்கிற்கு 300,000 ரிங்கிட் , குவான் எங்கிற்கு 250,000 ரிங்கிட் மற்றும் தெரசா கோக்கிற்கு 200,000 ரிங்கிட் வழங்க வேண்டும் என Siti Masturaவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி Quay Chew Soon  உத்தரவிட்டிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!