Latestமலேசியா

’Demo Rakyat Lawan Anwar’ போராட்டத்தையும், அதன் பின்னால் இருப்பவர்களையும் விசாரியுங்கள் – PKR கோரிக்கை

கோலாலம்பூர், ஜூன்-20, ‘Demo Rakyat Lawan Anwar’ என்ற பெயரில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்துள்ள அரசு சார்பற்ற இயக்கத்தை (NGO) போலீஸ் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 29-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள அந்த ஆர்ப்பாட்டம், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமைக் கவிழ்க்கும் திட்டமாகும்.

அதோடு, அரசாங்கத்தின் மீது மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி, நாட்டின் பொருளாதார மீட்சியைத் தடுக்கும் தீய நோக்கத்தை அது கொண்டிருப்பதாக, கூட்டரசு பிரதேச பி.கே.ஆர் கட்சியின் செயலாளர் Muhammad Fikri Abd Aziz கூறினார்.

எனவே, அந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படக்கூடாது என போலீஸ் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில் மலேசியா பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துவதுடன், நாடு நிலைத் தன்மையில்லாமல் இருப்பது போன்ற தவறான பிம்பத்தைக் கட்டமைப்பதுவுமே அந்த NGO-வின் நோக்கம் என Muhammad Fikri சாடினார்.

அந்த அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து புத்ராஜெயா போலீஸ் நிலையத்தில் அவர் முன்னதாக புகார் செய்தார்.

Demi Negara என தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு NGO, ஜூன் 29-ஆம் தேதி மாலை 4.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை, பிரதமரின் அதிகாரத்துவ இல்லமான ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் அந்த ஆர்பாட்டத்தை நடத்தவிருப்பதாக முன்னதாக செய்திகள் வெளியாகின.

கறுப்பு நிற சட்டையை அணிந்து வருமாறும் பங்கேற்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டதாக, இணைய ஊடகமொன்றில் கூறப்பட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!