
ஜோர்ஜ்டவுன், மே-14-பினாங்கு மாநிலச் சட்டமன்றம், Dr லிங்கேஸ்வரன் ஆர் அருணாச்சலத்தை இரண்டாவது முறையாக மேலவை உறுப்பினராக ஒருமனதாகப் பரிந்துரை செய்துள்ளது.
முதல்வர் Chow Kon Yeow, லிங்கேஷ்வரனின் பெயரை முன்மொழிய, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக அதனை ஆதரித்தனர்.
இது அவரின் தலைமைத்துவம், அனுபவம் மற்றும் மக்கள் நலனுக்காக அவர் ஆற்றிவரும் தொடர்ச்சியான சேவைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
மருத்துவம், சட்டம் மற்றும் சுகாதார மேலாண்மை ஆகிய துறைகளில் உயர்கல்வி பெற்ற Dr லிங்கேஸ்வரன், இதற்கு முன்னதாக சுங்கை பாக்காப் மருத்துவமனையின் இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
2023 முதல் 2026 வரையிலான தனது முதல் தவணை பதவிக்காலத்தில், நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை சீர்திருத்தங்கள், மருத்துவர்களின் நலன்கள் மற்றும் கல்வி மேம்பாடு குறித்துத் துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்தார்.
பினாங்கு மாநில இந்து அறப்பணிகள் வாரியம் மற்றும் பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் குழுவின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் இவர், இந்திய சமூகத்தின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காகத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.
இளம் தொழில்முறைத் தலைவரான Dr லிங்கேஸ்வரனின் இந்த மறுநியமனம், மாநில மற்றும் தேசிய அளவிலான வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லிங்கேஷ்வரன் விரைவிலேயே இரண்டாவது தவணையாக மேலும் 3 ஆண்டுகளுக்கு செனட்டராக பதவியேற்பார்.



