Latestமலேசியா

Durian Tunggal துப்பாக்கிச் சூடு: விசாரணை தாமதம் உண்மையை மறைக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தும் – ராயர்

கோலாலம்பூர், நவ-03-Durian Tunggal துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணையைத் தொடங்குவதில் ஏற்படும் தாமதம், உண்மையை மறைக்க முயற்சி நடப்பதாகப் பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும். Jelutong நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் அவ்வாறு எச்சரித்துள்ளார்.

மூவர் கொலை செய்யப்பட்ட அச்சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணை நடத்துவதில் அரசாங்கம் வேண்டுமென்றே தாமதம் செய்யவில்லை என உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail நாடாளுமன்றத்தில் அளித்த பதிலைத் தொடர்ந்து ராயர் அவ்வாறு கூறினார். அவ்விவகாரத்தை நாடாளுமன்றத்தில் மீண்டும் எழுப்பப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு நவம்பர் 24ஆம் தேதி, 24 முதல் 29 வயதுக்குட்பட்ட எம். புஷ்பநாதன், டி. பூவனேஸ்வரன், ஜி. லோகேஸ்வரன் ஆகிய மூவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் கத்தியால் காவல்துறை அதிகாரியைத் தாக்கிக் காயப்படுத்தியதாகக் காவல்துறை தெரிவித்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அவ்விளக்கத்தை மறுத்துள்ளனர்.

இவ்வேளையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன், நீதித்துறை விசாரணை என்பது கொலை வழக்கிற்கான குற்றவியல் விசாரணைக்கு மாற்றாகாது என்று வலியுறுத்தியுள்ளார். குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302இன் கீழ் கொலை வழக்காக விசாரிக்க உத்தரவிடப்பட்டிருந்தும், இதுவரை யாரும் ஏன் குற்றம் சாட்டப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த ஜூலை 7ஆம் தேதி வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, உயிரிழந்தவர்களில் இருவர் தலையில் சுடப்பட்டிருந்தனர்; மற்றொருவர் மார்புப் பகுதியில் மிக அருகிலிருந்து சுடப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும், நீதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விளக்கம் அளிக்குமாறு தேசிய சட்டத்துறைத் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்தாண்டு டிசம்பரிலேயே அவ்வழக்கு கொலை வழக்காக மறுவகைப்படுத்தப்பட்டிருந்தும், இதுவரை உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!