
கோலாலம்பூர், நவம்பர்-10,
ஆவண மோசடி சர்ச்சையால் அனைத்துலகக் கால்பந்து சம்மேளனம் FIFA-வால் தண்டனைப் பெற்ற விவகாரத்தில் அதிரடி திருப்பமாக, 7 கலப்பு மரபின வீரர்களும் மலேசியக் கால்பந்து சங்கமான FAM மீதே சட்ட நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகின்றனர்.
இது, FAM வட்டாரங்கள் மட்டுமின்றி உள்ளூர் கால்பந்து இரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gabriel Arrocha, Facundo Garces, Rodrigo Holgado, Imanol Machuca, Joao Figueiredo, Jon Irazabal, Hector Hevel ஆகிய அந்த எழுவருக்கும், FIFA ஒரு வருட ஆட்டத் தடையும், தலா 11,000 ரிங்கிட் அபராதமும் விதித்துள்ளது.
இதனால், தத்தம் கிளப்புகளுடனான அவர்களின் சேவை ஒப்பந்தமும் உடனடியாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
தங்களின் அந்நிலைக்கு,
ஆவணங்களைச் சமர்ப்பித்ததில் FAM செய்த நிர்வாகத் தவறே முக்கியக் காரணம் என அந்த எழுவரும் நம்புகின்றனர்.
எனவே, FAM மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி அந்த 7 பேரும் அனைத்துலக சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்விவகாரத்தில் FAM-முக்கு FIFA தனியாக 1.8 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.
அதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தோல்வி கண்டுள்ள நிலையில், FAM இனி நம்பியிருப்பது அனைத்துலக விளையாட்டு நடுவர் மன்றத்தை மட்டுமே…



