
கோலாலம்பூர், ஜூலை-14 – JAC எனப்படும் நீதித்துறை நியமன ஆணையக் கூட்டத்தின் நிமிடங்கள் கசிந்ததாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நீதித்துறை தலையீடு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலுத்து வருகின்றன.
ஆகக் கடைசியாக, பெர்சாத்து கட்சித் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசினும் சட்டத் துறைக்கான முன்னாள் துணையமைச்சர் ராம் கர்பால் சிங்கும், தனித்தனி அறிக்கைககளில் அக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.
குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அவை ஒரு நபரின் நியாயமான விசாரணைக்கான அடிப்படை உரிமையை சமரசம் செய்யக்கூடுமென, முன்னாள் பிரதமருமான முஹிடின் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.
நீதித்துறை நியமனங்கள் நேர்மையுடன் செய்யப்படுவதை உறுதிச் செய்ய சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை வலுவோடு இருக்குமென பெரிகாத்தான் நேஷனல் தலைவருமான அவர் சொன்னார்.
மே மாதம் நடைபெற்ற JAC கூட்டத்தின் பகுதிகளைக் கொண்டதாகக் கூறப்படும் ஓர் ஆவணம் கடந்த வார இறுதியில் சமூக ஊடகங்களில் வைரலாகி, பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் கவலைகளை எழுப்பியுள்ளது.
நீதித்துறையில் நிர்வாகப் பதவிக்கான வேட்பாளரின் நேர்மை குறித்து நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி கவலைகளை எழுப்பியதாக, அந்தக் கூட்ட நிமிடங்களில் கூறப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.
கேள்விக்குரிய நீதிபதி ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு ஆதரவாக ஒரு வழக்கின் முடிவைப் பாதிக்க முயன்றதாகவும், மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்த சக நீதிபதியை இடமாற்றம் செய்யக் கோரியதாகவும் அதிர்ச்சிகரமான கூற்றுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், JAC கூட்டத்தின் நிமிடங்கள் கசிந்ததாகக் கூறப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டம் மற்றும் வேறிரண்டு சட்டங்களின் கீழ் போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இவ்வேளையில், அந்த உள்ளடக்கத்தின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்கும் அதே வேளை, அது எப்படி வெளியில் கசிந்தது என்பதையும் கண்டறிய வேண்டுமென, பினாங்கு புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் கூறினார்.
எந்தவொரு விசாரணையும் வெளிப்படையாகவும் விரிவாகவும் மேற்கொள்ளப்பட வேண்டியது அதை விட முக்கியமாகும்.
நீதி பரிபாலனத் துறையின் நெறிமுறைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் மடானி அரசாங்கம் ஏனோ தானோ என்ற போக்கைக் கடைப்பிடிப்பது போன்று தெரியக் கூடாது என, DAP சட்டப் பிரிவுத் தலைவருமான அவர் சொன்னார்.
இம்மாதத் தொடக்கத்தில் நாட்டின் தலைமை நீதிபதியாக கட்டாயப் பணி ஓய்வுப் பெற்ற துன் தெங்கு மைமுன் துவான் மாட்டின் சேவை நீட்டிக்கப்படாமல் போனதை அடுத்து, நீதிபதிகள் நியமனம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
அவ்விஷயத்தில் தமது தலையீடு இல்லையென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் பலமுறை தெளிவுப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.