குவாலா குபு பாரு, மே-12 – குவாலா குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது, மலாய் வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்திருப்பதைக் காட்டுவதாக சிலாங்கூர் மந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் மீதான மலாய்க்காரர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது; ஒருவருக்கொருவர் நமக்குத் தேவை என்பதை மலேசியர்கள் உணர்ந்துள்ளனர்.
எனவே மலேசியாவை மேம்படுத்தவும், மக்கள் நலன் காக்கவும் இந்த ஒற்றுமை அரசாங்கமே சிறந்தத் தேர்வு என்பது மீண்டும் நிரூபணம் ஆயிருப்பதாக Amirudin சொன்னார்.
KKB-யில் முன்கூட்டிய வாக்களிப்பில் பதிவான வாக்குகளும், தபால் வாக்குகளும் பக்காத்தான் வேட்பாளருக்குச் சாதகமாக விழுந்திருக்கின்றன.
PH கூட்டணியின் வைப்புத் தொகையாகப் பார்க்கப்படும் சீன, இந்திய மற்றும் Orang Asli வாக்காளர்களின் ஆதரவும் குறையாமல் அப்படியே இருக்கிறது.
இம்முறை மலாய்க்காரர்களும் குறிப்பாக போலீஸ், ராணுவத்தினரின் வாக்கு வங்கியும் அதிகளவில் பக்காத்தானுக்குச் சென்றிருப்பதால், ஒற்றுமை அரசாங்கம் மக்களின் தேர்வாகத் தனித்து நிற்கிறது.
அதே சமயம், பிரிவினைவாதத்தைத் தூண்டும் எதிர்கட்சியினருக்கு தேர்தல் முடிவு ஒரு சம்மட்டி அடி என Amirudin வருணித்தார்.
வாக்காளர்களிடம் பிரிவினைவாதம் இனியும் எடுபடாது; அனைவரும் ஒன்றுபட்ட மலேசியாவையே விரும்புகிறார்கள் என Amirudin கூறினார்.
KKB இடைத்தேர்தலில் களமிறங்கிய DAP-யின் Pang Sock Tao, 14,000 வாக்குகளைப் பெற்று, பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் உள்ளிட்ட மூவரைத் தோற்கடித்தார்.