கோலாலம்பூர், மே-12 – சிலாங்கூர், குவாலா குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிப் பெற்றிருப்பது, ஒற்றுமை அரசாங்கம் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும் என மக்கள் கொடுத்துள்ள சமிக்ஞை என பிரதமர் வருணித்துள்ளார்.
அரசாங்கம், முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுத்து, நாட்டின் பொருளாதாரத்தை வலுத்தப்படுத்த வேண்டும் என வாக்குப் பெட்டி வாயிலாக மக்கள் உணர்த்தியிருப்பதாகவே தாம் கருதுவதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
எனவே, மக்களின் ஆணையையும் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில் அரசாங்கம் பொறுப்போடு செயலாற்றும் என்றார் அவர்.
பக்காத்தான் வேட்பாளரின் வெற்றிக்குக் கடுமையாக உழைத்திட்ட ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளுக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
நேற்றைய இடைத்தேர்தலில் PH வேட்பாளர் Pang Sock Tao, 3,869 வாக்குகள் பெரும்பான்மையில் மற்ற மூன்று வேட்பாளர்களைத் தோற்கடித்தார்.
எதிர்கட்சியான பெரிக்காத்தான் நேஷனலிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்நோக்கிய போதிலும், குவாலா குபு பாரு தொகுதியை PH தக்க வைத்துக் கொண்டுள்ளது.
KKB சட்டமன்ற உறுப்பினராக இருந்த DAP-யின் Lee Kee Hiong புற்றுநோய்க் காரணமாக காலமானதை அடுத்து அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது.