Latestமலேசியா

KLIA சரக்கு கிடங்கில், வெடிகுண்டு புரளி; நிறுவன பணியாளர் கைது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 29 – KLIA – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் சரக்கு கிடங்கில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு உதவும் பொருட்டு ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.

23 வயதான சம்பந்தப்பட்ட ஆடவன், பொட்டலத்தின் மீது நகைச்சுவையாக அந்த மிரட்டல் குறிப்பை எழுதியதை, தொடக்க கட்ட விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளதாக, KLIA மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் அஸ்மான் ஷரியாத் தெரிவித்தார்.

அவ்வாடவன் ஸ்ரீ கெம்பாங்கானில் செயல்படும் நிறுவனம் ஒன்றின், கிடங்கு பராமரிப்பாளன் ஆவான்.

உடன் பணிப்புரியும் நண்பர் ஒருவரிடம் கேலி செய்யும் தோரணையில், சம்பந்தப்பட்ட பொட்டலத்தில் வெடிகுண்டு இருப்பதாக அவன் எழுதி வைத்துள்ளான். எனினும், பின்னர் அதனை அளிப்பதற்குள், அப்பொட்டலம் அங்கிருந்து விநியோகிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

அதே நாள், KLIA போலீஸ் தலைமையகத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்திருந்த போது அவன் கைதுச் செய்யப்பட்டதை அஸ்மான் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை, KLIA சரக்கு கிடங்கில், “இந்த பொட்டலத்தில் வெடிகுண்டு உள்ளது. தூக்கிப் போட்டால் வெடித்து விடும்” என எழுதப்பட்டிருந்த பொட்டலம் ஒன்றால் பீதி கிளப்பியது.

உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த, வெடிகுண்டை அகற்றும் பிரிவினரும் K9 மோப்ப நாய் பிரிவினரும் மேற்கொண்ட சோதனையில், அந்த பொட்டலத்தில், மடிக்கணினியும், பேட்டரியும், சில கம்பி இணைப்புகளும் இருந்தது தெரிய வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!