கோலாலம்பூர், ஜூலை 10 – KLIA அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்திலுள்ள 6 ஆவது நுழைவாயில் பகுதியிலுள்ள இடத்தில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான மழை காரணமாக இன்று காலை மழை நீர் கசிவு ஏற்பட்டதாக மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் Bhd (MAHB) தெரிவித்துள்ளது. அதனை சரிசெய்வதற்காக அந்த பகுதி இன்று நண்பகல்வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக விமான நிலைய கட்டுப்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனால் விமானச் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்றும், இந்த ஓய்வறைப் பகுதிக்கு அருகேயிருந்து புறப்படும் அடுத்தடுத்த விமானங்கள் மாற்று வாயிலுக்கு
மாற்றப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் இந்த மாற்றம் குறித்து உடனடியாகத் தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.11 மணியளவில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த இடத்தில் உடனடியாக சீரமைப்பு பணி நடைபெறுவதற்கு அமலாக்க குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளர். பராமரிப்புக் குழு கசிவை சரிசெய்வதற்கும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க முழுமையாக பழுதுபார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . வசதிகளின் நீடித்த தன்மையை மதிப்பீடு செய்து, தீவிர வானிலை நிலைமைகளை சமாளிக்க திறம்பட வேலை செய்வோம் என மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.