
கிளானா ஜெயா, ஆகஸ்ட்-24-சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மாய்சூரி நோராஷிகின், பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற Last Dive ஆவணத் திரைப்படத்தின் பிரத்யேகக் காட்சியில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து அப்படத்தைக் கண்டு களித்தார்.
சிலாங்கூர் மாற்றுத்திறனாளிகள் அறவாரியமான YANIS-சின் அரசப் புரவலரான அவர், சிறப்புத் தேவையுடைய பிள்ளைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இந்நிகழ்வில் உற்சாகமாகப் பங்கேற்றார்.
மாற்றுத்திறனாளிகளை அனைத்துத் துறைகளிலும் வலுப்படுத்துதல், கடல்சார் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சமூகத்தில் நிலவும் எதிர்மறைப் பார்வைகளைக் களைதல் ஆகிய 3 உன்னத நோக்கங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
உடல் இயக்க வரம்புகளைக் கடந்து மாற்றுத்திறனாளிகள் தங்களது முழு ஆற்றலை வெளிப்படுத்த _skuba diving_ கலை எவ்வாறு கைகொடுக்கிறது என்பதை இத்திரைப்படம் மிக நேர்த்தியாக விவரிக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் எவ்விதப் பாகுபாடுமின்றி கலை, கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்குத் தளங்களில் சம வாய்ப்புகளுடன் தடையின்றிப் பங்கேற்பதை உறுதிச் செய்ய மாநில அரசு எப்போதும் துணை நிற்கும் என, அதே நிகழ்வில் பங்கேற்ற சிலாங்கூர் மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நல ஆட்சிக்குழு உறுப்பினர் Anfaal Saari தெரிவித்தார்.



