
ஷா ஆலாம், ஜூலை-1 – ஷா ஆலாம் LRT 3 இரயில் சேவைத் திட்டம் நிறைவடைந்ததை ஒட்டி, சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா இன்று முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டில், கூட்டரசு நெடுஞ்சாலையில் நிலவியக் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, கிள்ளான், ஷா ஆலாம் மற்றும் கோலாலம்பூரை இணைக்கும் இந்த திட்டத்தை தாம் முன்மொழிந்தபோது, அதற்கு எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக ஒப்புதல் அளித்த அப்போதையப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு சுல்தான் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
அதே வேளை, 2018-ல் ஆட்சிக்கு வந்த பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் போது இத்திட்டத்திற்கு 18 மாதங்கள் தாமதம் ஏற்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, இத்திட்டத்தை ஒரு மெகா திட்டமாக வகைப்படுத்தி, அதன் செலவுகளைக் குறைத்த அப்போதைய நிதி அமைச்சர் லிம் குவான் எங் மற்றும் DAP பிரமுகர் தோனி புவா ஆகியோரின் செயல்பாடுகளை சுல்தான் விமர்சித்தார்.
தொடர்ந்து, தற்போதைய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இத்திட்டத்தை கைவிடாமல் தொடர்ந்ததோடு, இரத்துச் செய்யப்பட்ட 5 இரயில் நிலையங்களை மீண்டும் கொண்டு வர ஒப்புதல் அளித்ததற்கும், நிலையங்களைச் சுற்றி மலிவு விலை வீடுகளை அமைக்க திட்டமிட்டதற்கும் சுல்தான் ஷராஃபுடின் பாராட்டு தெரிவித்தார்.
இறுதியாக, LRT 3 திட்டம் பூர்த்தியடைந்ததற்கு எந்தவொரு தரப்பும் தனிப்பட்ட முறையில் உரிமைக் கோரக் கூடாது என வலியுறுத்திய சுல்தான், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க Prasarana நிறுவனம் இந்த இரயில் சேவையை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.



