
கோலாலம்பூர், மார்ச் 17 – பெரிக்காத்தான் நேசனலில் இணைவதற்கான பங்கேற்புக் கடிதத்தை ம.இ.கா இன்று பெறும் என பெரிக்காத்தான் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறியுள்ள அறிக்கைக்கு மலேசிய இந்தியர் மக்கள் கட்சியான (MIPP) யின் அதிர்ச்சியை அதன் தலைவர் பி. புனிதன் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கை முந்தைய பெரிக்காத்தான் நேசனல் கூட்டங்களில் உண்மையில் விவாதிக்கப்பட்டவற்றுடன் ஒத்துப்போகவில்லை என்று அவர் வலியுறுத்தினார் . ம.இ.காவை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் அது ஒரு கொள்கை ரீதியான ஒப்புதல் மட்டுமே, இன்னும் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று MalaysiaGazette இணையத்தள பதிவேட்டிடம் புனிதன் இன்று தெரிவித்தார்.
அண்மைய கூட்டத்தில் இணைவதற்கான கடிதத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் கொள்கை ரீதியாக மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டதே தவிர , இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லையென அவர் கூறினார்.
கொள்கை ரீதியாக இந்த விவகாரம் ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரனுடன் விவாதிக்கப்பட்டு தொடர்ந்து விவாதங்களை தொடர ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதில் அதிகாரப்பூர்வமாக இணையும் கடிதத்தை சமர்ப்பிப்பதோ அல்லது வழங்குவதோ அடங்காது என புனிதன் தெளிவுப்படுத்தினார்.
டிசம்பரில் நடந்த பெரிக்காத்தான் நேசனல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஒருமனதாக எடுக்கப்படவில்லை, மாறாக, பாஸ், பெர்சத்து மற்றும் கெராக்கான் கட்சிகள் ஆதரவளித்த நிலையில், MIPP எழுத்துப்பூர்வமான ஆட்சேபனையைச் சமர்ப்பித்ததால், முடிவு 3-1 என்ற பெரும்பான்மையுடன் எடுக்கப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட கூட்டத்தின் குறிப்புகளில், பேச்சுக்கள் தொடரும் என்றும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு ஒரு தொடர் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்ததாக புனிதன் கூறினார்.



