
ஷா ஆலாம் – ஆகஸ்ட்-1 – 6 ஆண்டுகளுக்கு முன் MMEA எனப்படும் மலேசியக் கடல் அமுலாக்க நிறுவனத்தால் லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தற்கொலை செய்து கொண்டவர் தான் 31 வயது எம். தினகரன் எனும் ஒரு பாதுகாவலர்.
அவரின் மரணத்திற்கு அத்துறையின் அலட்சியமே காரணமெனக் கூறி குடும்பத்தார் வழக்குத் தொடுத்த நிலையில், தற்போது அவர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.
போதியப் பராமரிப்பு இல்லாததால், தினகரனின் மரணத்தைத் தடுப்பதில் சிலாங்கூர் கடல் நிறுவனத்தின் இயக்குநர், MMEA விசாரணை அதிகாரி, அரசாங்கம் ஆகியத் தரப்புகள் தோல்வி கண்டுள்ளதாக, ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
இதையடுத்து தினகரனின் குடும்பத்துக்கு 194,000 ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செலவுத் தொகையாக தனியாக 30,000 ரிங்கிட்டும் வழங்கவும் அவர்கள் உத்தரவிடப்பட்டனர்.
அத்தீர்ப்பை எதிர்த்து, அரசாங்கம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தினகரனின் குடும்பமும் கூடுதல் இழப்பீட்டைக் கேட்டு மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
2019-ஆம் ஆண்டு சிலாங்கூர் கரையோரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கப்பல் தடுத்து நிறுத்தப்பட்ட போது, அதில் தினகரன் மற்றும் ஆர். இந்திரன் என்ற இன்னொரு நபரும் இருந்தனர்; சோதனையிட்டதில் போதைப்பொருள் அடங்கிய பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து இருவரும் விசாராணைக்காக கைதாகி கிள்ளானில் உள்ள கடல் அமுலாக்க நிறுவனத்தின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
அதன் போது தினகரன், சிகிச்சைக்காகக் தெங்கு அம்புவான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மன உளைச்சலுடன் தொடர்புடைய தலைவலியால் பாதிக்கப்பட்டது உறுதிச் செய்யப்பட்டு அதற்கு மருந்தும் கொடுக்கப்பட்டது.
எனினும், 4 நாட்களுக்குப் பிறகு, லாக்கப் அறையில், கால்சட்டையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார்.
லாக்கப் அறையில் gril கம்பிகள் இருப்பதுத் தெரிந்தும், கூடுதலாக அவரிடம் கால்சட்டையை கொடுத்தது, கடைசியில் அந்நபரின் தற்கொலைக்கு உதவியுள்ளது; இந்த அலட்சியம் நடக்காமல் இருந்திருந்து, கண்காணிப்பும் முறையாக இருந்திருந்தால் தினகரனின் தற்கொலையைத் தடுத்திருக்கலாம் என, நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.