Latestமலேசியா

MRT மேம்பாலத்திலிருந்து தொங்கிய கேபிளில் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயம்

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 3 – ஸ்ரீ ராயா மற்றும் பண்டார் துன் ஹுசேன் ஓன் MRT நிலையங்களுக்கிடையே மேம்பாலத்திலிருந்து தொங்கிய கேபிளில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மோதியதில் காயமடைந்துள்ளார். மேலும், அந்த வழியாகச் சென்ற சில வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

Rapid KL வெளியிட்ட அறிக்கையின்படி, MRT மேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த கேபிள் துண்டிக்கப்பட்டு சாலையில் தொங்கிய நிலையில் இருந்தது. ஆரம்பக்கட்ட விசாரணையில், கேபிள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு சம்பவ இடத்திலேயே அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் காஜாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தகவல் கிடைத்ததும் Rapid KL தொழில்நுட்பக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று கேபிளை அகற்றினர். இதனால், சாலைப் பயணிகளுக்கு ஏற்பட்ட ஆபத்து நீக்கப்பட்டது. MRT மேம்பாலத்தின் கட்டமைப்புக்கும் ரயில் சேவைக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. காஜாங் MRT வழித்தட ரயில் சேவை வழக்கம்போல் இயங்கி வருகிறது.

கேபிள் திருட்டு தொடர்பாக Rapid KL, நெடுஞ்சாலை நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!