
லக்னோவ், பிப்ரவரி-25-இந்தியா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் NEET தேர்வு தொடர்பில் தந்தை கொடுத்து வந்த அழுத்தம் தாங்காமல், 19 வயது மகனே அவரைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிய பயங்கர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
NEET தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட தகராறே கொலைக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 20-ஆம் தேதி வாக்குவாதம் முற்றி, தந்தை மன்வேந்திர சிங்கை மகன் அக்சத் பிரதாப் சிங் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
பின்னர் உடலை பல துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் போட்டு தூரமாக வீசியுள்ளான்.
உடலின் எஞ்சிய பகுதியை வீட்டிலிருந்த நீல நிற தோம்பில் மறைத்து வைத்தான்.
அதனைப் பார்த்து விட்ட தனது தங்கையை வெளியில் சொல்லக் கூடாது என அவன் மிரட்டியும் உள்ளான்.
ஒன்றும் தெரியாதது போல், தந்தை காணாமல் போய்விட்டதாக போலீஸிலும் அக்சத் பொய்ப் புகார் செய்தான்.
ஆனால் விசாரணைக்காக வந்த போலீஸார் வீட்டில் நடத்திய சோதனையில் உண்மை அம்பலமானது.
அவன் உடனடியாக கைதுச் செய்யப்பட்ட நிலையில், வெளியில் வீசப்பட்ட தந்தையின் உடல் பாகங்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இப்புதியச் சம்பவம் தேர்வுகளின் அழுத்தம் மாணவர்களின் மனநலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மீண்டும் விவாதத்தை தூண்டியுள்ளது.



