
கோலாலாம்பூர், மே-25-மலேசியாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் சம்பளத்தில் ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்படும் Perkeso எனும் சமூகப் பாதுகாப்பு நிதியானது, தங்களின் வருமானத்தைக் குறைக்கும் ஒரு சுமையாகவே பலரால் பார்க்கப்படுகிறது.
ஆனால், அதன் பின்னணியில் உள்ள உண்மையான பலன்களை அவர்கள் அறிவதில்லை.
அவை யாவை என்பது குறித்து ‘வணக்கம் மலேசியா’ விரிவாக அலசுகிறது.
நாட்டில் நடப்பிலுள்ள குறைந்தபட்ச சம்பளமான 1,700 ரிங்கிட் பெறும் ஒரு தொழிலாளி, தனது பங்களிப்பாக மாதத்திற்கு வெறும் 8 ரிங்கிட் 50 சென்னைக் Perkeso-வுக்காகச் செலுத்துகிறார்.
குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு இந்தச் சிறிய தொகைகூட உடனடியாகப் பாதிப்பை ஏற்படுத்துவது போல் தோன்றலாம்; ஆனால், இது அவர்களுக்குப் பின்னாலிருக்கும் ஒரு மாபெரும் பாதுகாப்பு அரணாகும் எனப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தனியார் மருத்துவக் காப்பீடுகளைப் போல வயது அல்லது முந்தைய நோய் விவரங்களைக் காரணம் காட்டி Perkeso யாரையும் புறக்கணிப்பதில்லை.
மாறாக, வேலையிடங்களில் ஏற்படும் விபத்துகள், தற்காலிக அல்லது நிரந்தர உடல் செயலிழப்புகள் மற்றும் எதிர்பாராத மரணங்களின் போது தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமான நிதிப் பாதுகாப்பையும், ஓய்வூதியத்தையும் இது உறுதிச் செய்கிறது.
அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் மற்றும் முதியோர்களின் எண்ணிக்கைக்கு மத்தியில், இத்தகைய கூட்டுச் சமூகக் காப்பீடு இல்லாவிட்டால், எதிர்பாராத நெருக்கடிகளின் போது எளிய குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சுருக்கமாகச் சொன்னால், உங்கள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் அந்தச் சில ரிங்கிட்டுகள், எந்தவொரு மலேசியத் தொழிலாளியும் அவரது அவசரக் காலங்களில் தனித்து விடப்படுவதில்லை என்பதற்கான அரசாங்கத்தின் அமைதியான உத்தரவாதமாகும்.
தொழிலாளர்களின் பாதுகாப்பே தேசத்தின் உண்மையான பொருளாதார வலிமையாகும்…



