கிளானா ஜெயா, செப்டம்பர் -2, ஒரு காலத்தில் பிரசித்திப் பெற்று திகழ்ந்த Pestabola Merdeka கால்பந்துப் போட்டிக்கு, இம்முறை இரசிகர்களிடமிருந்து படுமோசமான வரவேற்பு கிடைத்துள்ளதற்கு, குறிப்பிட்ட தரப்பால் திட்டமிடப்பட்டுள்ள புறக்கணிப்பே காரணமாக இருக்கலாம்.
மலேசியக் கால்பந்து சங்கம் FAM அவ்வாறு கூறியுள்ளது.
Harimau Malaya, நடப்பு வெற்றியாளரான தஜிகிஸ்தான், லெபனான், பிலிப்பின்ஸ் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் அப்போட்டி வரும் புதன்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் தொடங்குகிறது.
ஆனால் இதுவரை ஆயிரத்துக்கும் குறைவான டிக்கெட்டுகளே விற்கப்பட்டுள்ளன.
இது பெரும் அதிர்ச்சியுடன் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டிக்கெட் விற்பனையை விளம்பரப்படுத்த பல வழிகளை கையாண்டு வருகிறோம்; தேசிய அணிக்கு உள்ளூர் இரசிகர்களின் ஆதரவு அவசியமென FAM உதவித் தலைவர் போசா மஜாய்ஸ் (Posa Majais) கூறினார்.
Harimau Malaya-வின் ஆதரவாளர்கள் கிளப்பான Ultras Malaya இவ்வாண்டுக்கான Pestabola Merdeka போட்டியைப் புறக்கணிப்பதாக, கடந்த மாதமே அறிவித்து விட்டது.
தேசிய ஆட்டக்காரர்கள் சிலரை பாதித்துள்ள கிரிமினல் சம்பவங்கள் இன்னும் தீர்க்கப்படாமலிருப்பது, தலைமைப் பயிற்றுநர் Kim Pan-gon -னின் திடீர் ராஜினாமா போன்ற சம்பவங்களால் ஏற்பட்ட அதிருப்தியே அதற்குக் காரணமென Ultras Malaya கூறியிருந்தது.