
.அலோர் காஜா, ஜூலை-31 – மலாக்கா, அலோர் காஜா அருகே உள்ள PLUS நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாலை சுமார் 4 மணியளவில், சிம்பாங் அம்பாட் டோல் சாவடி அருகே வடக்கே செல்லும் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
3 டன் எடை கொண்ட Isuzu லாரி கவிழ்ந்ததில், அதன் 40 வயது ஓட்டுநர் வாகனத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அலோர் காஜா மற்றும் ஆயர் குரோ தீயணைப்புப் படையினர், ஓட்டுநரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகச் சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.
இந்த விபத்து மற்றும் மீட்புப் பணிகள் காரணமாக, நெடும்சாலையின் இருபுறமும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நகராமல் நின்றதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
வாகனம் அகற்றப்பட்ட பிறகு போக்குவரத்து நிலைமை படிப்படியாகச் சீரடைந்தது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



