ஈப்போ, ஜூன்-6 – வெளிநாட்டவர் உட்பட மற்றவர்களுக்கு PPR வீடுகளை வாடகைக்கு விடும் உரிமையாளர்களுக்கு எதிராக விரைவில் மாபெரும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் அதனை அறிவித்துள்ளார்.
PPR வீடமைப்புத் திட்டத்திற்கு பல்வேறு மானியங்களை அரசாங்கம் வழங்குகிறது.
ஆக, PPR வீடுகளை வாடகைக்கு விடுவதென்பது சட்ட விதிமுறை மீறலாகும்; அவ்வாறு செய்பவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கைப் பாயும் என அமைச்சர் எச்சரித்தார்.
3 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள PPR வீடுகளை வெறும் 45 ஆயிரம் ரிங்கிட்டுக்கே அவர்கள் வாங்கியுள்ளனர்.
மீதி 2 லட்சத்து 45 ஆயிரம் ரிங்கிட்டை மானியம் என்ற பெயரில் அரசு ஏற்றுக் கொள்வதை ஙா கோர் மிங் சுட்டிக் காட்டினார்.
தங்குவதற்கு ஒரு வீடில்லை எனக் கூறி ஆரம்பத்தில்
PPR வீடுகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள்; ஆனால் வீடுகள் கிடைத்ததும் அங்கு தங்குவதில்லை, மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டு விடுகிறார்கள் என அமைச்சர் ஆதங்கத்துடன் சொன்னார்.
வெளிநாட்டவர்கள், அதிலும் கள்ளக் குடியேறிகளுக்கு வீடுகளை வாடகைக்கு விடுவோரும் உண்டு எனக் கூறிய அமைச்சர், விரைவில் சோதனை நடவடிக்கை பெரிய அளவில் நடத்தப்படும் என்றார்.
இதனிடையே, PPR வீடுகளில் vandalism எனப்படும் சொத்துக்களைச் சேதப்படுத்தும் நடவடிக்கைகளைக் களையும் விதமாக, மின்தூக்கிகளில் CCTV கேமராக்களைப் பொருத்தும் தேவை குறித்து அமைச்சு ஆராயும் என ஙா கோர் மிங் சொன்னார்.
எனினும் அந்தளவுக்குச் செல்ல வேண்டிய அவசியத்தை மலேசியர்கள் ஏற்படுத்த மாட்டார்கள் என நாம் நம்புவதாக அவர் கூறினார்.