
கோலாலம்பூர், அக்டோபர் 9 – தேசிய உயர்கல்விக் கடன் நிதி நிறுவனமான PTPTN கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கும் கடனாளிகள், கடன் தவணைகளை மறுசீரமைப்பது அல்லது திருப்பிச் செலுத்தும் காலத்தை ஒத்திவைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி நிலவரத்தின்படி, 1.16 மில்லியன் கடனாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய கடன் நிலுவைத் தொகை 10.7 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருன் (Datuk Seri Aminuddin Harun) எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சு இதனைத் தெரிவித்தது.
மேலும், PTPTN அமைப்பின் நீண்டகால நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்த கடன் விதிமுறைகள் மேம்படுத்தப்படும் என்றும், கடன் வசூலை வலுப்படுத்துவதற்காகச் சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுடனான ஒத்துழைப்பும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அமைச்சு கூறியது.



