
கோலாலம்பூர் – வெறும் ஒரு ரிங்கிட் கட்டணத்தில், நிதி வாய்ப்புகள், அரசாங்க ஆதரவுத் திட்டங்கள், தொழில் வழிகாட்டுதல் மற்றும் Business Pitching என பல்வேறு வாய்ப்புகளை இந்திய தொழில்முனைவோருக்குக் கொண்டு சேர்க்கும் MAICCI தொழில்முனைவோர் மாநாடு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
குறிப்பாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சான KUSKOP-இன் MUDRA திட்டத்தின் கீழ் கிடைக்கும் வாய்ப்புகள் மேலும் அதிகமான இந்திய தொழில்முனைவோர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் MAICCI இந்த முயற்சியை முன்னெடுத்து வருகிறது.
MUDRA திட்டத்தின் கீழ் கிடைக்கும் நிதி வாய்ப்புகள் மற்றும் அரசாங்க ஆதரவுகள் குறித்து இந்திய தொழில்முனைவோருக்கு தெளிவுபடுத்துவதுடன், சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் அவர்களை இணைப்பதற்கான தளமாகவும் இந்த மாநாடு அமையவுள்ளது.
“Access to Funding • Access to Knowledge • Access to Opportunities” என்ற அடிப்படையில் நடைபெறும் இம்மாநாடு, வெறும் networking நிகழ்ச்சியாக இல்லாமல், தொழில்முனைவோர் தங்கள் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் தளமாக அமையவுள்ளது.
இதனிடையே, இந்திய பெண் தொழில்முனைவோர்களும் இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என APS Manja Sdn Bhd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், MAICCI மகளிர் பிரிவுத் தலைவருமான டாக்டர் ஹேமலா சிவம் வலியுறுத்தினார்.
பெண் தொழில்முனைவோர் தங்களுக்குக் கிடைக்கும் நிதி மற்றும் தொழில் வாய்ப்புகளை அறிந்துகொள்வதுடன், சரியான வழிகாட்டுதல் மற்றும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள இந்த மாநாடு முக்கிய தளமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இம்மாநாட்டின் மற்றொரு முக்கிய அம்சமாக Business Pitching Session இடம்பெறவுள்ளது.
இதற்கான தயாரிப்பாக, MAICCI மூலம் பல மாநிலங்களில் தொழில்முனைவோருக்குச் சிறப்பு coaching sessions நடத்தப்பட்டு வருகின்றன.
அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 20 தொழில்முனைவோருக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டு, தங்களது வர்த்தக யோசனைகளை pitch செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
அவர்களில் சிறந்த மூவர் தேர்வு செய்யப்பட்டு, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் Steven Sim முன்னிலையில் தங்களது வர்த்தக யோசனைகளை முன்வைக்கும் வாய்ப்பைப் பெறவுள்ளனர்.
இந்த Business Pitching மற்றும் அதன் மூலம் தொழில்முனைவோருக்குக் கிடைக்கவுள்ள வாய்ப்புகள் குறித்து கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா இந்திய வர்த்தக சபையின் பொதுச் செயலாளர் Selva Nagappan விளக்கினார்.
மேலும், இந்த Business Pitching-இல் சிறந்து விளங்குபவர்களுக்காக மொத்தம் RM50,000 பரிசுத் தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெறும் RM1 கட்டணத்தில் நிதி, தொழில் அறிவு, வழிகாட்டுதல் மற்றும் புதிய வாய்ப்புகளை ஒரே தளத்தில் பெறக்கூடிய இந்த மாநாட்டை இந்திய தொழில்முனைவோர் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
“Connect • Collaborate • Grow” என்ற நோக்குடன் இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இம்மாநாடு, ஏற்கனவே தொழில் செய்து வருபவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதோடு, மேலும் அதிகமான இந்தியர்கள் தொழில்முனைவோர்களாக உருவாகவும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வெறும் RM1-க்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை நழுவவிடாமல், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் திரையில் காணும் விவரங்கள் மூலம் உடனடியாகத் தங்களைப் பதிவு செய்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.



