
கோலாலம்பூர், அக்டோபர்-16,
பெண் தொழிலதிபரும் சமூக ஊடக பிரபலமுமான டத்தோ ஸ்ரீ வீடாவின் சொத்துக்கள், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஏலத்துக்கு வருகின்றன.
ஏராளமான ஆடம்பரக் கார்களும் உட்பட 727 உடமைகளும் அவற்றிலடங்கும்.
கடந்தாண்டு டிசம்பரிலிருந்து தள்ளிப் போன நிலையில், இப்போது ஏலம் உறுதியாகியுள்ளது.
இந்நடவடிக்கை, அவரைச் சுற்றியுள்ள சட்ட மற்றும் நிதி வழக்குகள் தொடர்பாக மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஏலத்திற்கு வரும் பொருட்கள் பட்டியலில் விலையுயர்ந்த நகைகள், தனிப்பட்ட பொருட்கள், மற்றும் பல விலைமதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு நவம்பர் 25-ஆம் தேதி ஈப்போவில் உள்ள அவரது சொகுசு பங்களாவில் 5 மணி நேர சோதனை நடவடிக்கையின் போது அவை பறிமுதல் செய்யப்பட்டன.
AH Design Communication நிறுவனத்திற்கு 2018-ஆம் ஆண்டிலிருந்து 1 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேலான கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் வெறும் கடனாகப் பெற்ற பொருட்கள் என்பதால், ஏலத்தை ஒத்திவைக்க வீடா கோரியிருந்தார்.
ஆனால் அதற்கு அவர் உறுதியான ஆதாரங்களை முன்வைக்கத் தவறியதால் நீதிமன்றம் அவருக்கு எதிராக தீர்ப்பளித்தது.
பங்களா, ஆடம்பர கார்கள் என பெரும் ‘செல்வத்துடன்’ வலம் வந்த வீடாவின் பொருட்கள் ஏலத்திற்கு வருவது, இது நாள் வரை அவரை வியப்போடு பார்த்த மக்களிடம் பரவலான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது