
RM21 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்; 2 கும்பல்கள் முறியடிப்பு
ஷா ஆலாம், பிப்ரவரி-19,
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனைகளில், 2 பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் RM21 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, புக்கிட் அமானின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் தெரிவித்தார்.
இதில் மெத்தாம்பெட்டமின், ஹெரோயின், MDMA, கஞ்சா, எக்ஸ்டசி, எரிமின் 5 போன்றவையும் அடங்கும்.
முதல் நடவடிக்கையில், உள்ளூரைச் சேர்ந்த 5 சந்தேக நபர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
இரண்டாவது நடவடிக்கையில், 3 வெளிநாட்டு நபர்கள் 170 கிலோக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து ஒரு கைதுப்பாக்கியும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதலான இந்த போதைப்பொருட்கள் 1.6 மில்லியன் பயனர்களை பாதிக்கக்கூடியவை என ஹுசேய்ன் மேலும் கூறினார்.
சந்தேக நபர்கள் 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் மற்றும் 1971-ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.



