கோலாலம்பூர், மே 20 – ஒரு மணி நேரம் “கராவோக்கே” சேவை வழங்க 80 ரிங்கிட் கட்டணமாக விதிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பஹாங், கோலா ரோம்பின் மற்றும் ஜோகூர், எண்டாவ் ஆகிய இடங்களில் உள்ள இரு கேளிக்கை மையங்களில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கைகளில் அது தெரிய வந்துள்ளது.
புக்கிட் அமானின், சூதாட்டம், ஒழுங்கீன மற்றும் குண்டர் கும்பல் துடைத் தொழிப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட அந்த சோதனையின் வாயிலாக மொத்தம் 35 பேர் கைதுச் செய்யப்பட்ட வேளை ; அதில் 26 பேர் அந்நிய நாட்டு பெண்கள் என புக்கிட் அமான் தலைமை இயக்குனர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் பாரோக் எசாக் தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் 19 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களில் 23 பேர் வியட்நாமையும், இருவர் லாவோஸையும், ஒருவர் தாய்லாந்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும், “மம்மி” என அழைக்கப்படும் இரு வியட்நாமிய பெண்களும் கைதாகினர்.
அவர்கள் அனைவரும் கைதுச் செய்யப்படும் போது போதைப் பொருள் உட்கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
கராவோக்கேயின் போது, வாடிக்கையாளருடன் உடன் இருக்க, அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 80 ரிங்கிட் கட்டணமாக விதித்து வந்தது தெரிய வந்துள்ளது.