
கோலாலம்பூர், செப்-24-மலேசியாவில் ஓட்டுநர் உரிமம் பெற Rohingya அகதிகளுக்கு அனுமதி வழங்க பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவியுள்ள தகவலைச் சாலை போக்குவரத்துத் துறையான JPJ மறுத்துள்ளது. அத்தகவல் உண்மையில்லை என்றும், JPJ அத்தகைய பரிந்துரை எதனையும் வெளியிடவில்லை என்றும் அது தெளிவுபடுத்தியது.
அவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் (MCMC) புகார் அளிக்கப்பட்டுள்ளதாக JPJ கூறியது. JPJ-யின் பெயர், அடையாளம் அல்லது சின்னத்தைப் பயன்படுத்தி பொதுமக்களைத் திசை திருப்பும் தகவல்களை உருவாக்குவது அல்லது பரப்புவதை தீவிரமாகக் கருதுவதாகவும் அத்துறை குறிப்பிட்டது.
‘Rohingyaக்கள் ஓட்டுநர் உரிமம் பெற அனுமதிக்க JPJ பரிந்துரை?’ என்ற தலைப்பில், முன்னதாக அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கை போன்ற தோற்றத்தில் முகநூல் கணக்கொன்றில் பதிவு ஏற்றப்பட்டிருந்தது. JPJ அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றதாகக் காட்டப்படும் படத்துடன் அதே தகவல் மற்ற பயனர்களாலும் பகிரப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. அப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதை அடுத்து, இணைவாசிகள் பலர் தங்களது கருத்துகளையும் அதிருப்திகளையும் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் அத்தகவலுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை என JPJ விளக்கமளித்துள்ளது. அதே சமயம் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படாத தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு அது பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களைப் பெற, JPJ-யின் அதிகாரப்பூர்வ தளங்களை மட்டுமே அணுகுமாறும் அது கேட்டுக் கொண்டது.



