Latestமலேசியா

RON95 பெட்ரோல் மானியத்திற்கான இரண்டு அடுக்கு விலை நிர்ணய முறையை அரசாங்கம் மேம்படுத்துகிறது – பிரதமர் தகவல்

ஷா ஆலாம், மார்ச்-28- RON95 பெட்ரோல் மானியத்திற்கான இரண்டு அடுக்கு விலை நிர்ணய முறையை அரசாங்கம் மேம்படுத்தி வருவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

பெட்ரோல் மானியம் நீக்கப்பட்டாலும் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என, நிதியமைச்சருமான அவர் மறு உறுதிப்படுத்தினார்.

நாட்டு மக்களில் சுமார் 85% முதல் 90% வரையிலானவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என, ஷா ஆலாமில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

எது எப்படி இருப்பினும், மாதத்திற்கு 50,000 ரிங்கிட் சம்பாதிப்பவர்கள் மற்றும் வெளிநாட்டினர் மட்டுமே மானியமில்லாத பெட்ரோலுக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும்; எனவே RON95 பற்றி பரப்பப்படும் பொய்கள் குறித்து கவனமாக இருக்குமாறு பொதுமக்களை அன்வார் எச்சரித்தார்.

MyKad அட்டை வாயிலாக RON95 எரிபொருள் மானியத்தை வழங்கும் வழிமுறைகளை, இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் அரசாங்கம் அறிவிக்கும் என இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் நேற்று கூறியிருந்தார்.

இலக்கிடப்பட்ட RON95 மானியத்திற்கு அரசாங்கம் இரண்டு அடுக்கு விலை நிர்ணய முறையை செயல்படுத்துமென, கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் தேதி, பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி மக்களவையில் கூறினார்.

டீசலுக்கு மானியம் வழங்க அரசாங்கத்தால் தற்போது பயன்படுத்தப்படும் பணப் பரிமாற்ற முறையுடன் ஒப்பிடும்போது இந்த வழிமுறை பணவீக்க தாக்கத்தின் குறைந்த அபாயத்தை ஏற்படுத்துவதாக ரஃபிசி கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!