Latestமலேசியா

RON95 விலை RM1.99-க்கு நிலைநிறுத்தம்; ஹரி ராயா உபசரிப்பு இரத்து – அன்வார்

புத்ராஜெயா, மார்ச்-11-எரிபொருள் விலை நிலைத்தன்மை மற்றும் நிதி ஒழுங்கு தொடர்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டு மக்களுக்கு இன்று சில நல்லச் செய்திகளை அறிவித்துள்ளார்.

முதன்மையானதாக, இலக்கிடப்பட்டோருக்கான RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.99 ரிங்கிட்டாக தொடருகிறது.

மார்ச் 9-ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டி, நேற்று 90 டாலருக்குக் குறைந்தது.

என்றாலும், பெட்ரோனாஸ் மற்றும் அரசாங்கத்தின் சீரிய நிதி நிர்வாகத்தால், BUDI95 மானிய திட்டத்தின் கீழ் குறைந்தது மே வரைக்குமாவது போதுமான விநியோகம் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

எனவே, மே வரையில் இந்த 1.99 ரிங்கிட் விலை நிலைத்திருக்கும் என்றும், மக்கள் மற்றும் வணிகங்களுக்கு சுமை குறையும் என்றும் அன்வார் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதனிடையே, மடானி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கையாக, இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படாது என்றும், இன்றைய சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் அறிவித்தார்.

அரசு நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களும் பெருநாள் உபசரிப்பை தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளன.

அதே சமயம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்களை குறைத்திட வேண்டும்; அவசியமான பயணங்களுக்கே அனுமதி வழங்கப்படும் என அன்வார் கூறினார்.

மத்திய கிழக்கில் நிகழும் மோதலின் பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ளும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது அமைவதாக பிரதமர் விளக்கினார்.

எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் நிலைத்திருந்தாலும், தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.

ஆனால், நிலைமை இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அவர் உத்தரவாதம் அளித்தார்.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!