
கோலாலம்பூர், ஏப்-1- 2025 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளை இனம் ரீதியாக பிரித்துக் காட்டும் பத்திரிகை அறிக்கை போலியானது என கல்வித்துறை துணையமைச்சர் வோங் கா வோ ( Wong Kah Woo )தெரிவித்தார்.
அந்த அறிக்கை பரவலாகப் பரவி வருவது 101 விழுக்காடு தவறானது. அது நிச்சயமாக உண்மையல்ல என்பதோடு அதனை கல்வி அமைச்சு வெளியிடவில்லையென இன்று டெங்கில் தமிழ் தொடக்கப் பள்ளிக்கு மேற்கொண்ட பணி நிமித்த வருகைக்குப் பின் செய்தியாளர்களிடம் Wong இத்தகவலை வெளியிட்டார்.
நேற்று முதல் சமூக ஊடகங்களில் பரவி வரும், கல்வி அமைச்சின் சின்னம் பொறிக்கப்பட்ட, இன ரீதியிலான மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டைக் காட்டும் செய்தி அறிக்கைக்கு வோங் பதிலளித்தார்.
சீன மற்றும் இந்திய மாணவர்களுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு SPM தேர்வில் மலாய்க்கார மாணவர்கள் குறைந்த தேர்ச்சி விழுக்காட்டைப் பெற்றிருந்தனர் என்று கூறும் ஆய்வும் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.



