கோலாலம்பூர், ஜூலை 6 – எஸ்.பி.எம் தேர்வில் பல ஏ-க்களை கொண்டு சிறந்த தேர்ச்சிப் பெற்ற அதிகமான மாணவர்களுக்கு மெட்ரிகுலேசன் திட்டத்தில் இன்னமும் வாய்ப்பு வழங்கப்படவில்லையென ம.சீ.ச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் ( Wee Ka Sion ) தனது ஏமாற்றத்தைத் தெரிவித்திருக்கிறார்.
மெட்ரிகுலேசன் திட்டத்தில் இடம் கிடைக்காத பல மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து தனது அலுவலகத்தில் மற்றும் மெட்ரிகுலேசன் தொடர்பான ம.சீ.ச பொறுப்பு அதிகாரி புகார்களை பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
நேற்று மாலை மணி மூன்று அளவில் முறையீடு தொடர்பான பதில் அறிவிக்கப்பட்டபோது 10 ஏ-க்கள் பெற்ற பல மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என ம.சீ.ச தலைவரின் முகநூலில் வீ கா சியோங் பதிவிட்டுள்ளார்.
மெட்ரிகுலேசன் திட்டத்தில் தங்களது பிள்ளைகளுக்கு இடம் கிடைக்கும் என அதிக நம்பிக்கையுடன் இருந்த பல பெற்றோர்கள் தற்போது மனம் உடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு SPM தேர்வில் 10 ஏ மற்றும் அதற்கும் அதிகமாக ஏ பெற்ற மாணவர்களுக்கு இன பாகுபாடு இன்றி மெட்ரிகுலேசன் வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டதாக ஜூன் 30 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.
அந்த கல்வி திட்டத்தில் இடம் கிடைக்காதர்களின், மேல் முறையீட்டின் முடிவுகள் நேற்று வெளியானபோது பிரதமர் வாக்குறுதி அளித்தது போல, சிறந்த தேர்ச்சி பெற்ற பல மாணவர்களுக்கு மெட்ரிகுலேசனில் வாய்ப்பு கிடைக்கவில்லையென வீ கா சியோங் சுட்டிக்காட்டினார்.
தகுதி பெற்ற அனைத்து மாணவர்களும் மெட்ரிகுலேசனில் வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.