பினாங்கு, ஆகஸ்ட்-20 – தான் தத்தெடுத்த மாணவர்களில் ஒருவர் SPM தேர்வில் 7 ஏக்களைப் பெற்றதை அடுத்து, நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக் கூறிய மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
பினாங்கில் கஜேஸ்வரன் எனும் அம்மாணவரின் வீட்டுக்கே நேரில் சென்று, அவரை வாழ்த்திய அமைச்சர், ரொக்க அன்பளிப்பையும் வழங்கினார்.
தனது தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் SPM தேர்வில் பெறும் ஒவ்வொரு A-க்கும் 50 ரிங்கிட்டை சன்மாக வழங்கி வரும் ஸ்டீவன் சிம், கஜேஸ்வரனுக்கு 7A-களுக்கான சன்மானத் தொகையை வழங்கி மகிழ்வித்தார்.
அதோடு நிறுத்தாமல், கஜேஸ்வரனை அவரே கணிணி கடைக்குக் கூட்டிச் சென்று, மடிக்கணினியைம் வாங்கித் தந்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
தற்போது கிப்பாளா பாத்தாசில் மெட்ரிகுலேஷன் கல்வியை மேற்கொண்டு வரும் கஜேஸ்வரனுக்கு, தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் 100 ரிங்கிட் நிதியுதவி, இனி 200 ரிங்கிட்டாக வழங்கப்படுமென்றும் கஜேஸ்வரனின் பெற்றோர்கள் முன்னிலையில் அமைச்சர் அறிவித்தார்.