கோலாலம்பூர், மே 9 – 2023-ஆம் ஆண்டுக்கான, SPM – சிஜில் பெலஜாரன் மலேசியா தேர்வு முடிவுகள், மே 27-ஆம் தேதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அன்றைய நாள், காலை மணி பத்து தொடங்கி, மாணவர்கள் தத்தம் பள்ளிகளுக்கு சென்று தேர்வு முடிவுகளை பெற்றுக் கொள்ளலாம் என, ஓர் அறிக்கையின் வாயிலாக இன்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.
தனியார் முறையின் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தபால் வாயிலாக முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். அல்லது மாநில கல்வித் துறையில் அவர்கள் தங்கள் முடிவுகளை சரிபார்த்துக் கொள்ளலாம்.
அல்லது பொது அல்லது தனியார் முறையில் தேர்வு எழுதியவர்கள், இம்மாதம் 27-ஆம் தேதி காலை மணி 10 முதல் ஜூன் இரண்டாம் தேதி மாலை மணி ஆறு வரையில், myresultspm.moe.gov.my எனும் இணைய அகப்பக்கம் வாயிலாகவும் தங்கள் தேர்வு முடிவுகளை சரிபார்த்துக் கொள்ளலாம் என, கல்வி அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
15888 என்ற எண்ணுக்கு குறுச்செய்தி அனுப்பியும் மாணவர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் திறக்கப்பட்ட மூவாயிரத்து 340 தேர்வு மையங்களில், மொத்தம் மூன்று லட்சத்து 95 ஆயிரத்து 870 பேர் 2023 SPM தேர்வை எதிர்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.