Latestமலேசியா

சுதந்திர பாலஸ்தீனம் ; சிறப்பு அஞ்சல் தலைகளையும், கடித உறையையும் வெளியிட்டது போஸ் மலேசியா

கோலாலம்பூர், டிசம்பர் 19 – தேசிய அஞ்சல் மற்றும் பொருட்களை விநியோகிக்கும் சேவை நிறுவனமான போஸ் மலேசியா, “சுதந்திர பாலஸ்தீன” சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.

அந்த அஞ்சல் தலையில், பாலஸ்தீன கொடியை அசைக்கும் கையின் படம் இடம்பெற்றுள்ள வேளை ; அதன் பின்னணியில் மக்கள் ஒன்றுபட்டு நின்கின்றனர்.

நெஞ்சை நெகிழ வைக்கும் அந்த படம், நீடித்த அமைதியை விரும்பும் மலேசியர்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதனிடையே, முதல் நாள் கடித உறையில், உலக அமைதியை குறிக்கும் வகையில், “ஆலிவ்” கிளையை வைத்திருக்கும் வெள்ளை புறா ஒன்று இடம்பெற்றுள்ளது.

கோப்புறையின் முகப்பில், ஒரு ஜோடி கைகள் ஒன்றையொன்று இறுக பிடித்திருப்பது, மலேசியாவின் அமைதிக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பை குறிக்கிறது. அதே சமயம், பின்னணியில் இருக்கும் கெபியா (Keffiyah) துணி, விடாமுயற்சி மற்றும் ஒற்றுமையின் சின்னமாக கருதப்படுகிறது.

அந்த சிறப்பு தபால் தலையையும், கடித உறையையும், தகவல் தொடர்பு அமைச்சர் பாஹ்மி பாட்சில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட வேளை ; போஸ் மலேசியா தலைவர் டான் ஸ்ரீ சையிட் பைசால் அல்பாரும், போஸ் மலேசியா குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சார்லஸ் ப்ரூவரும் உடன் இருந்தனர்.

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய பாஹ்மி, அதனை மிகவும் தெளிவாக வெளிப்படுத்திய போஸ் மலேசியாவின் நடவடிக்கையை பாராட்டினார்.

இந்த பாலஸ்தீன சுதந்திர அஞ்சல் தலை, பாலஸ்தீனர்கள் மீது மலேசியர்கள் கொண்டுள்ள பரிவை மட்டும் வெளிப்படுத்தவில்லை. மாறாக, மிகவும் சவால்மிகுந்த தருணங்களை கடக்க வேண்டிய சூழலில் இருக்கும் பாலஸ்தீனர்களுக்கு, ஆதரவு தெரிவிக்கும் சிறந்த வழியாகவும் இது அமைவதாக பாஹ்மி சொன்னார்.

இவ்வேளையில், எல்லையற்ற மனிதநேயத்தையும், எல்லைகளை கடந்த ஐக்கிய நிலைப்பாட்டையும் உலகிற்கு எடுத்துரைக்கும் ஆற்றலை அந்த அஞ்சல் தலைகள் கொண்டிருப்பது குறித்து போஸ் மலேசியா நிறுவனமும் பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அந்த அஞ்சல் தலை மற்றும் கடித உறை விற்பனை வாயிலாக பெறப்படும் வருமானத்தில் ஒரு பகுதி, வெளியுறவு அமைச்சல் நிர்வகிக்கப்படும், பாலஸ்தீன மனிதாபிமான அறக்கட்டளை நிதிக்கு வழங்கப்படும்.

பாலஸ்தீன சுதந்திர அஞ்சல் தலைகளை, அடுத்தாண்டு ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கி, ஒரு ரிங்கிட் 30 சென் விலையில், நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்கள் அல்லது www.pos.com.my/shop எனும் இணைய அகப்பக்கம் வாயிலாக பொதுமக்கள் வாங்கலாம்.

அஞ்சல் உறைகள் 50 சென் விலையில் விற்கப்படும் வேளை ; அஞ்சல் கோப்பை ஆறு ரிங்கிட்டிற்கு பொதுமக்கள் வாங்கலாம்.

மேல் விவரங்களுக்கு, பொதுமக்கள் போஸ் மலேசியாவின் சமூக ஊடகங்களை வலம் வரலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!