
ஜோர்ஜ்டவுன், செப்டம்பர்-12 – பினாங்கு, ஜெலுத்தோங்கில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த வாரம் கொள்ளையிட்டதாக, 15 வயது பெண் பிள்ளையும் 3 இளைஞர்களும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
அம்மூன்று ஆடவர்களில் ஒருவர் டிப்ளோமா மாணவர், ஒருவர் லாரி ஓட்டுநர், இன்னொருவர் வேலையில்லாத நபர் ஆவார்.
செப்டம்பர் 5-ஆம் தேதி நள்ளிரவில் 21 வயது இளைஞரிடமிருந்து iPhone 13 Pro Max கைப்பேசி மற்றும் 100 ரிங்கிட் ரொக்கத்தைக் கொள்ளையிட்டதோடு, அவரின் Touch ‘n Go கணக்கிலிருந்து வலுக்கட்டாயமாக RM 482 ரிங்கிட்டை மாற்றச் செய்ததாக நால்வரும் ஜோர்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
எனினும் நால்வருமே குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினர்.
இதையடுத்து, தலா 4,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தில் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
அக்டோபர் 17-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.