
கோலாலம்பூர், அக் -6,
Global Sumud Flotilla வில் இடம் பெற்றிருந்த காஸாவுக்கான மனிதநேய குழுவைச் சேர்ந்த மலேசிய தன்னார்வலர்கள் இன்று நாடு திரும்புவார்கள் என இஸ்தான்புல்லில் உள்ள மலேசிய தூதரக அதிகாரி அகமட் அமிரி அபு பாக்கார் ( Ahmad Amiri Abu Bakar ) தெரிவித்தார். அவர்கள் நாடு திரும்புவதற்கு தேவையான அனைத்து செயல்முறைகளும் முடிந்தவரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதோடு அவர்கள் ஆரோக்கியமாகவும் நல்ல நிலையிலும் இருக்கின்றனர்.
Global Sumud Flotilla வில் இடம் பெற்றிருந்த அனைத்து மலேசிய தன்னார்வலர்களும் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் இஸ்தான்புல் சென்றடைந்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்திருந்தார்.
23 மலேசிய தன்னார்வலர்களும் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, நெகேவ் ( Negev ) பாலைவனத்தில் அமைந்துள்ள கெட்ஷியோட் ( Ketziot ) சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை இஸ்ரேல் அதிகாரிகள் விடுதலை செய்ததைத் தொடர்ந்து அங்கிருந்து துருக்கி விமானத்தின் மூலம் உள்ளூர் நேரப்படி மாலை மணி 3.40 அளவில் இஸ்தான்புல் சென்றடைந்தனர்.
பாடகி Nur Heliza Helmi அவரது சகோதரி Nur Hazwani Afiqah Helmi, Norfarahin Romli ஆகியோரும் இந்த தன்னார்வாலர்களில் அடங்குவர். அவர்கள் அனைவரிடம் மலேசிய கடப்பிதழ் இருக்கிறது. அப்படியே இல்லாவிட்டாலும் அதற்கான ஏற்பாட்டை மலேசிய தூதரக அலுவலகம் செய்யும் என அகமட் அமிரி தெரிவித்தார். இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கு ஹோட்டலில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.